நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்துவம் பெறுகிறது. வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தேடிச் சென்ற எமது செய்தியாளரின் கமராவில் மற்றுமொரு சோகம் நிறைந்த சம்பவம் பதிவானது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வரட்சி ஏற்படுத்தியுள்ள துயரம் அளப்பரியது. இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகளவில் குறைவடைந்துள்ள நிலையில், தமது தேவைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலும் முற்றாக நீர் வற்றியுள்ள நிலையில் அன்றாட தேவைக்கு கூட நீரை பெற்றுக்கொள்வதில் இந்த பிரதேச மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். தமது அன்றாட தேவைக்காவது நீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் நீரை சேகரிக்கும் நோக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். வெறும் சோற்றையும், சின்னவெங்காயத்தையும் மாத்திரம் சாப்பிட்டு உயிர் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை நியூஸ்பெஸ்ட் ஆராய்கிறது. வீட்டுக்கு உள்ளே சென்று ஒளிப்பதிவு செய்துவிட்டு எமது செய்தியாளர் மனவேதனையோடு திரும்பிச் செல்கையில் வீட்டிற்குள் இருந்து கேட்ட அழுகுரல் எமது செய்தியாளரை மீண்டும் அந்த வீட்டிற்குள் விரைய வைத்தது. வரட்சி, வறுமை என்று சோகத்தில் வாடிய இந்தக் குடும்பத்தில் மற்றுமொரு சோகம் அங்கு நிகழ்ந்திருந்தது. சிறிது நேரத்திற்கு முன்னர் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரை அந்தக் குடும்பம் இழந்து தவிக்கும் காட்சிகளை காணமுடிந்தது. அவ்வேளையில் வீட்டு உரிமையாளர் இயற்கை எய்தியிருந்தார்.
No comments:
Post a Comment